2025ல் குரு பலன் யாருக்கு? குரு பலன் வருவதால் திருமண யோகம் அமையுமா? குரு பலன் எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது ?
குரு பலன்: பொதுவாக குரு பகவான்,சந்திரன் நின்ற ராசிக்கு (ஜென்ம ராசி) 2,5,7,9,11 ஆகிய இடங்களில் வரும் காலம் தனயோக காலமாக அல்லது குரு பலன் வரும் காலமாக அமையும். குரு பார்க்க கோடி நன்மை எனும் வகையில் குருபகவான் தான் நின்ற ராசியிலிருந்து 5,7,9 ம் இடங்களை பார்க்கும் போது நல்ல யோக பலன்களை அள்ளித் தருவார். அதே சமயம் குரு நின்ற இடம் பாழ் என்பதற்கேற்ப குருபகவான் தான் நின்ற இடத்தின் காரகத்தன்மையை இழக்க செய்து விடுவார்.
2025ல் குரு பலன் யாருக்கு?
திருக்கணிதப்படி மே 14 ல் குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் 5 குறிப்பிட்ட ராசிகள் குரு பலன் பெற்று அதிர்ஷ்டமான ராசிகளாக யோகம் பெறுவர்.
ரிஷபம்
கும்பம்
தனுசு
துலாம்
சிம்மம்
ரிஷப ராசிக்கு தனஸ்தானத்திலும், கும்ப ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், தனுசு ராசிக்கு களத்திர ஸ்தானத்திலும், துலாம் ராசிக்கு பாக்கியஸ்தானத்திலும், சிம்ம ராசிக்கு லாப ஸ்தானத்திலும் பெயர்ச்சியாகிறார்.
குருவால் என்ன பலன்?
தன காரகன் என்று அழைக்கப்படும் குரு பகவான் திடீர் தன யோகத்தை அளிப்பார். அதுமட்டுமல்லாது புத்திர பாக்கியம், திருமண யோகம், பூர்வீகசொத்துகளினால் ஆதாயம், தொழில் லாபம் ஆகியவை கிட்டும்.
திருமண யோகம் :
ஜென்ம ராசிக்கு குரு பலன் கைகூடி வரும் காலங்களில் திருமண யோகம் அமையும். ஆனால் அதற்குண்டான திசா புத்தி காலங்கள் மட்டுமே திருமணம் அமைய சாதகத்தை ஏற்படுத்தி தரும். கோச்சார குரு பலன் மற்றும் திசா புத்தி காலங்கள் ஒருவரது திருமண வயதை உறுதி செய்யும்.
2025ல் மேற்சொன்ன 5 ராசிகளில், சுப கிரகங்களின் திசா புத்தி அந்தர காலங்கள் கொண்ட ஜாதகருக்கு மட்டுமே திருமண யோகம் அமையும். மற்றபடி குரு பலன் எதிர்பார்த்த காரிய வெற்றிகள், தனயோக தன லாபங்களை அமைத்துக் கொடுக்கும்.
இத்துடன் வேறு சில நிலைகளையும் எடுத்துக் கொள்ளலாம். ஆண் ஜாதகம் எனில் கோட்சார குரு (நிகழ்கால குரு), அவரின் பிறந்த ஜாதகத்தில் உள்ள சுக்கிரனை பார்க்கும் காலம் மற்றும் குரு பலனும் சேர திருமண யோகம் ஏற்படும். அதேபோல பெண் ஜாதகம் எனில் கோட்சார குரு, அவரின் ஜாதகத்தில் உள்ள செவ்வாயை பார்க்க மற்றும் குரு பலன் சேர திருமண யோகம் அமையும்.
புத்திர காரகன் என்று அழைக்கப்படும் குரு பகவான், ஜாதகர் சந்ததி விருத்திக்கு தயாராகி விட்டார் என்பதை நிர்ணயம் செய்கிறார். குரு பலன் ஆண் பெண் இருவரில் யாரேனும் ஒருவருக்கு திருமண காலத்தில் இருக்க, நல்லது. மேலும் திருமணத்திற்கு உண்டான சுப திசா புத்திகள் நிச்சயம் அமைந்திருக்க வேண்டும்.
பொதுவாக திருமண பொருத்த நிலைகளில் சமரசத்துக்கோ சஞ்சலத்திற்கோ இடம் கொடுக்க இயலாது. திருமணப் பொருத்தம் பார்த்து இணைக்கப்படும் ஜாதகர்கள் மனநிறைவும் மகிழ்ச்சியான வாழ்வும் வாழ ஜோதிடத்தில் பல சூட்சம விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மேற்கண்ட காரணிகள் பொருந்தும் பட்சத்தில் நிச்சயம் திருமண யோகம் அமைந்து விடும்.